தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

மொட்டுக் காளான் படுக்கை தயாரித்தல்
நீண்ட கால அல்லது குறுகிய காலமுறையில் தயாரிக்கப்பட்ட மட்கினைப் பாலித்தீன் பை அல்லது மரப்பெட்டிகளில் நிரப்பி, அடுக்கு முறை அல்லது கலப்பு முறையில் மொட்டுக் காளான் பூசண வித்தையிட்டுப் படுக்கைகள் தயாரிக்க வேண்டும். பத்து கிலோ வளர்புலம்(மட்கு) உள்ள பாலித்தீன் பைக்குச் சுமார் 75 கிராம் காளான் வித்து தேவைப்படும்.

படுக்கையில் பூசண வளர்ச்சி

  • வித்திட்ட மட்கின் மேல் 2 சத பார்மலின் மருந்தில் நனைக்கப்பட்ட  செய்தித்தாட்களைக் கொண்டு மூட வேண்டும்.
  • சுவர், தரை மற்றும் செய்தித்தாட்களின் மீது தண்ணீர் தெளித்தல் அல்லது காற்று ஈரப்படுத்திகளைப் பயன்படுத்துதல் மூலம் அறையில் 90-95 சதம் ஈரப்பதம் ஏற்படுத்த வேண்டும்.
  • அறையின் வெப்பநிலை 23 ± 2°செ. ஆக இருக்க வேண்டும்.
  • இத்தருணத்தில் அறையில் காற்றோட்டம் அதிகமாகத் தேவையில்லை.
பாலித்தீன் பைகளிலுள்ள மட்கில் சுமார் 14 முதல் 18 நாட்களில் வெண்மையாகப் பூசண வளர்ச்சி தெரியும். இந்நிலையில் படுக்கைகளின் மேற்பகுதியில் செய்தித் தாட்களை நீக்கிவிட்டுச் சுமார் 2-3 செ.மீ. உயரத்திற்கு மேற் கொண்டு பூச்சுக் கலவையிட வேண்டும். பின் இப்படுக்கைகளை சுத்தமான அறையிருட்டான அறைகளில் அடுக்கி வைத்துப் படுக்கை காய்ந்து விடாதவாறு, கீழ் தண்ணீர் தெளித்துப் பராமரிக்க வேண்டும். இவ்வறையின் வெப்பம் 20°செ.க்கு மிகாதவாறும், காற்றின் ஈரப்பதம் 90 சதத்துக்குக் குறையாமலும் இருத்தல் அவசியம்.

மேற்பூச்சு இடுதல்
மேற்பூச்சு இட இலை மட்கு, மக்கிய சாணம், மணல், தென்னை நார்க்கழிவு உரம் ஆகியன பல்வேறு விகிதங்களில் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. மேற்பூச்சுக் கலவையின் கார அமிலத் தன்மை நடுநிலையில் (pH 7.0) இருக்க வேண்டியது அவசியம். இதற்கு மேற்பூச்சுக்காகப் பயன்படுத்தும் பொருளுடன், கால்சியம் கார்பனேட்டைத் தேவையான அளவு கலக்கலாம்.

காளான் தோன்றுதல்
மேற்பூச்சு இட்ட படுக்கைகளின் மேல் ஈரப்பதம் இருக்குமாறும், அதே சமயம் நீர் தேங்கி விடாமலும் கவனமாகத் தண்ணீர் தெளித்துப் பராமரித்தல் அவசியம். சுமார் 10-15 நாட்களில் படுக்கையின்  மேற்பகுதியில் சிறு காளான் மொட்டுகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்நிலையில் அறைகளில் அதற்கான அமைப்புகள் மூலம் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி (3.6 கன மீட்டர், சதுர மீட்டர் படுக்கைக்கு), கரியமில வாயு அதிகமாவதைத் தவிர்க்க வேண்டும். தவிர, அறையின் வெப்பநிலையை 15 முதல் 20°செ. ஆகக் குறைத்து, காற்றின் ஈரப்பதத்தை 85 சதத்திற்குக் குறையாது பராமரிக்க வேண்டும். பட்டாணி அளவுக்குக் காளான் மொட்டுக்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் அவற்றின் மீது நீர்த்திவலைகள் தேங்காதவாறு தண்ணீர் தெளித்தல் அவசியம். அடுத்த 3 முதல் 5 நாட்களில் வெண்மொட்டுக் காளான்கள் அறுவடைக்குத் தயாராகி விடும். ஏழு முதல் பத்து நாட்கள் இடைவெளியில் 3 அல்லது 4 அறுவடைகள் செய்யலாம். அறுவடையின் போது காளானுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்துகள்கள் முழுவதையும் நீக்கிவிட்டு, அதன்பிறகு துளையிட்ட பாலித்தீன் பைகளில் விற்பனைக்குச் சேகரிக்க வேண்டும். மொட்டுக்கள் விரிவடையும் வரை அறுவடை செய்யாமல் விடக்கூடாது. இரண்டு முறை அறுவடை செய்தபின், மேற்பூச்சுக் கலவையை நன்கு கிளறிவிட்டு, மீண்டும் சமப்படுத்தித் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதனால் 3 அல்லது 4 அறுவடையின் போது சீரான விளைச்சல் கிடைக்கும். சுமார் 70 நாட்களில் 10 கிலோ அளவிலான மட்கிலிருந்து 3.5 கிலோ அறுவடை செய்யலாம். கணக்கீட்டின்படி இது 35 சத விளைதிறனாகும்.

மொட்டுக் காளானின் சுவை பொதுவாக எல்லோராலும் விரும்பப்படுகிறது. இதனை உலரவைத்தல், உறைநிலையில் பாதுகாத்தல், உலர் உறை செய்தல், டப்பாக்களில் அடைத்தல் ஆகிய முறைகளிலும் பாதுகாக்கலாம். பொதுவாக, இக்காளான் தயாரிக்க ஆகும் செலவினத்தைக் கணக்கிட்டால் ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.40 வரை ஆகும். சந்தையில் இது ரூ.80 வரை விற்கப்படுகிறது. சிறிய அளவில் இக்காளானை உற்பத்தி செய்தால், தேவைப்படும் மூலதனம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எதிர்பார்க்கும் நிகரலாபம் கிடைக்காது. எனவே குறைந்தது நாள் ஒன்றுக்கு 500 முதல் 1000 கிலோ வரை உற்பத்தி செய்யும் நோக்கோடு அதற்கான அமைப்புகளை உருவாக்கிச் சாகுபடி செய்தால் மொட்டுக் காளான் உற்பத்தியில் வெற்றியடையலாம்.
Updated on Dec 2013

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014